வீட்டு தனிமைப்படுத்தலை கண்காணிக்க பொறிமுறை

வீட்டு தனிமைப்படுத்தலை கண்காணிக்க பொறிமுறை

கோவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டு தனிமைப்படுத்தல் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய ஒரு கண்காணிப்பு பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு பணிகள் அலுவலர்கள் குழுவொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி, குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள், கிராம அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இதில் அடங்குவர்.

கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று வீட்டு தனிமைப்படுத்தலாகும். நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். கண்காணிப்புக் குழுவில் உள்ள ஒவ்வொரு அதிகாரியும் வாரத்தின் ஒவ்வொரு நாளும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று செயல்முறைகளை கண்காணிப்பார்கள்.

அவர்கள் குடியிருப்பாளர்கள் அனைவரும் வீட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரிப்பதும் இந்த குழுவின் பொறுப்பாகும். கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் நோயாளிகள் மற்றும் தொடர்புடையவர்களின் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாக்க கடப்பாடுடையவர்கள். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளின் சுத்தம் மற்றும் பிற நோயாளர்கள், அங்கவீனர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் குறித்தும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தனிமைப்படுத்தல் காலத்தில் ஒரு குடும்ப உறுப்பினர் நோய்த்தொற்றுக்கு ஆளானால் ஏனைய உறுப்பினர்கள் அதிலிருந்து மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். வீட்டிலேயே தனிமைப்படுத்தல் தொடங்கும் போதெல்லாம், அப்பகுதியின் பொதுச் சுகாதார பரிசோதகர் உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

வீட்டு தனிமைப்படுத்தல் தொடர்பான கண்காணிப்பு பொறிமுறை கூட்டமைப்பு மற்றும் பொறுப்புகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்களினால் அமைச்சுக்ககள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள், மாகாண சுகாதார செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு நேற்று (25) சுற்றறிக்கையொன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு தனிமைப்படுத்தல் முறையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விசேட பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்