விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள விசேட சலுகைகள் : அமைச்சர் மஹிந்தானந்த அறிவிப்பு!

விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள விசேட சலுகைகள் : அமைச்சர் மஹிந்தானந்த அறிவிப்பு!

உர மானியத்தைப் பெறும் விவசாயிகளிடம் இருந்து உத்தரவாத விலையில் நெல்லினைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கமத்தொழில் அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்திலேயே அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உர மானியத்தைப் பெறும் ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் அடுத்த பருவத்திலிருந்து ஒரு ஹெக்டயருக்கு 1000 கிலோ நெல், தலா 50 ரூபா  உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யப்படும்.

மேலும், நெல் களஞ்சியப்படுத்தலை திறமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றியமைப்பதற்காக களஞ்சிய வசதிகளை சரி செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ரூ.100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

நெல் மீதான ஏகாதிபத்தியத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், நெல் விலையை முறையான வகையில் பராமரிக்கவும் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் விவசாய செயற்பாடுகளின் போது இரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இது பல உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலைமையைத் தவிர்க்கும் பொருட்டு, இலங்கையிலுள்ள அனைத்து விவசாய சேவை  மத்திய நிலையத்திலும் மண் பரிசோதனை கருவிகள் அப்பகுதியில் உள்ள மண்நிலைமைகளுக்கு ஏற்ப உரங்கள் வழங்கப்படும்.

மேலும், விவசாய நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக ஒவ்வொரு விவசாய சேவை மத்திய நிலையத்திலும் ஒரு இயந்திர பிரிவு அமைக்கப்படும்.

அதற்காக பெக்கோ உபகரணம், உழவுயந்திரங்கள் போன்றவை உட்பட விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

முழு நாட்டையும் உள்ளடக்கிய ஒரு தரவுத்தளம் விவசாய தகவல்களை உள்ளடக்கும் வகையில் தொகுக்கப்படும்.

இதில் பல்வேறு காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் பயிர் விளைச்சல் தொடர்பான அனைத்து தகவல்களும் அடக்கப்படும்” என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.