எரிபொருள் விலைதொடர்பாக அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
உலக சந்தையில் எரிபொருள் விலையில் தளம்பல் காணப்பட்டாலும் எரிபொருள் விலையை நிலையாகப் பேணும் கொள்கையை புதிய அரசாங்கம் பின்பற்றி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சர் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் சமகால சந்தை நிலவரத்தை ஆராய்ந்து உறுதிப்படுத்துவதன் ஊடாக நிதியமொன்றை நிறுவுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன் தற்போது 65 வீதமான எரிபொருள் பவுசர் மூலமும், 35 வீதமான எரிபொருள் ரயிலின் மூலமாகவும் எடுத்துச் செல்லப்படும் நிலையில், வாகன நெரிசலைக் குறைக்கும் விதமாக 60 வீதமான எரிபொருளை ரயில் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பெற்றோலிய பொதுக் களஞ்சிய முனையத்தில் காணப்படும் குழப்பங்கள் காரணமாக அங்கு பணியாற்றும் பணியாளர்கள் குழுவொன்று நியாயமற்ற முறையில் இன்னமும் தொழிலில் நிரந்தரமாக்கப்படாமல் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் இது குறித்து அவதானம் செலுத்தி உரிய தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.