கிழக்கு மாகாணத்தில் இதுவரை 144 பேர் கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் – மருத்துவர் ஏ.லதாகரன்
கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளப் படுத்தப்பட் டுள்ளனர். இந்நிலையில் அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 13 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் அக்கரைப்பற்றில் மாத்திரம் 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று சந்தையில் எழுமாற்றாக 20 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போதே இந்த 10 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு தொடர் பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் ஏனைய பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
பேலியகொட மீன் சந்தைக் கொத்தணி போன்று இங்கும் சிறிய கொத்தணி ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இதிலிருந்து அனைவரையும் பாதுகாக்க சுகாதாரத் துறையில் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.
புதன்கிழமை (25) அடையாளப்படுத்தப்பட்ட 13 புதிய தொற்றாளர்களில் அக்கறைப்பற்றில் 10 பேரும், காத்தான்குடியில் இருவரும், சாய்ந்தமருதில் ஒருவருமாவர்.
காத்தான்குடியில் அடையாளப்படுத்தப்பட்டவர்களில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான பெண்ணுடன் நேரடித் தொடர்புட்ட பெண் ஒருவரும் மற்றும் கொழும்பிலிருந்து வந்த ஒருவரும் அடங்குவர்.
கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதில் வியாழக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 85 பேரும், திருகோணமலை மாவட் டத்தில் 16 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 8 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 35 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று டெங்கின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தவும் பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.