
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
அம்பமுகவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 6 பேருக்கு இன்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அம்பமுகவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினுடைய பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் இதனை தெரிவித்தார்.
அத்துடன் நமுனுகுல - கனவரெல்ல - 13 ஆம் கட்டை பகுதியில் மேலும் 6 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
கொழும்பில் இருந்து சென்றிருந்த ஒருவருக்கு நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து அவருடன் தொடர்புடைய சிலரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த 6 பேருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்றைய தினம் மேலும் 485 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்துள்ளமைக்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கமைய 15 ஆயிரத்து 447 பேர் இதுவரையில் இந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறி இருப்பதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது ஐந்தாயிரத்து 426 பேர் கொவிட் 19 நோய்தொற்றுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரையில் 20 ஆயிரத்து 967 பேர் கொவிட் 19 நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வெலிகந்த கொவிட் 19 சிகிச்சை மையத்தில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளர் ஒருவர் காவல்துறையால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளர்.
போதைப்பொருளுக்கு அடிமையான அவர், நேற்றை தினம் இவ்வாறு தப்பிச் சென்றிருந்தார்.
இந்தநிலையில் வெலிகந்த நகரில் வைத்து காவல்துறையினரால் அவர் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் கொவிட் 19 தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 753 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் புதிதாக 24 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் 19 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் காவல்துறை விசேட அதிரப்படையின் 17 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் கொவிட் 19 தொற்றுறுதியான காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரப்படையினரின் எண்ணிக்கை ஆயிரத்து 150 ஆக அதிகரித்துள்ளது.
பேலியகொடை - நெல்லிகஹவத்தை மற்றும் பொரளை - சஹஸ்புர வீடமைப்பு தொகுதியில் வசிக்கும் சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது வருமானம் இழக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யத முடியாதுள்ளதாகவும் கூறி அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.