மன்னார் தள்ளாடிச் சந்தி விபத்தில் படுகாயமுற்ற உத்தியோகத்தர் 11 நாட்களின் பின் யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணம்
மன்னார் தள்ளாடிச் சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபரத் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றிய வவுனியாவைச் சேர்ந்த தனபாலசிங்கம் நிசாந்தன் (வயது-30) சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை(24) உயிரிழந்தார்.
மன்னாரிலிருந்து பிரதான பாலம் ஊடாகச் சென்ற டிப்பர் வாகனமும், திருக்கேதீஸ்வரம் – தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கிப் பயணித்த மோட்டார் கைக்கிளும் தள்ளாடிச் சந்தியில் கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை சுமார் 8.15 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி வந்த குறித்த நபர் படுகாயமடைந்தார்.
இவர் கடமையின் நிமித்தம், திருக்கேதீஸ்வரம் – தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றது.
இதன் போது குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 11 தினங்களாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை(24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.