நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி..!

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி..!

நாட்டில் நேற்றைய தினம் 337 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

பேலியகொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடைய 335 பேருக்கும், இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வந்த தலா ஒருவருக்கு இவ்வாறு நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானது.

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் மாத்திரம் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 978 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 508 ஆக காணப்படுகின்றது.

அதேநேரம் கொவிட் 19 தொற்றில் இருந்து நேற்றைய தினம் 428 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் 5 ஆயிரத்து 921 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கிளிநொச்சியியில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ருபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தொற்றுறதியானவர்கள் அல்லது தொற்று அபாயமுடையவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 3 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த மரணங்கள் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்டவை என சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் உறுதிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஹெயியன்தொடுவ பகுதியை சேர்ந்த 86 வயதான பெண் ஒருவர் கொவிட் 19 தொற்றுறுதியானவர் என கண்டறியப்பட்டதன் பின்னர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் கடந்த 22 ஆம் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கு காரணம், கொவிட் 19 தொற்றினால் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொவிட் 19 தொற்றுறுதியானவர் என கண்டறியப்பட்டதுடன், பின்னர் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

குறித்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்தமைக்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் குருதி விசமானதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்புக்கு மாரடைப்பு நிலைமை மற்றும் கொவிட் 19 தொற்றுறுதியானமை காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியான காவல்துறையினரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

இதற்கமைய காவல்துறை கொரோனா கொத்தணியில் இதுவரையில் ஆயிரத்து 39 காவல்துறையினருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் காவல்துறை விசேட அதிரடி படையை சேர்ந்த 238 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.