பாடசாலைகளில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய மேலதிக நிதி : சுகாதார அமைச்சு!

பாடசாலைகளில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய மேலதிக நிதி : சுகாதார அமைச்சு!

மாணவர்களின் நலன் கருதி, பாடசாலைகளில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய, 105.812 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார்.

இதன்படி, 100 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பாடசாலைகளுக்கு எண்ணாயிரம் ரூபா வீதமும், 200 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பாடசாலைகளுக்கு 10 ஆயிரம் ரூபா வீதமும் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், 200 மாணவர்களுக்கு அதிகமாகவுள்ள பாடசாலைகளுக்கு 12 ஆயிரம் ரூபா வீதமும் வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பௌத பிரிவெனாக்கள் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் உட்பட ஏனைய கல்வி நிறுவனங்களுக்காகவும், இவ்வாறு நிதி வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, மாணவர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, தொடர்ந்தும் சிறந்த முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல, அனைத் தரப்பினரும், தமது ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றையதினம், பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வரவு திருப்திகரமான மட்டங்களில் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில், பெற்றோரும், பாடசாலை சமூகத்தினரும் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.