முதல் பரிசோதனையில் தொற்று இல்லை..! இரண்டாவது பரிசோதனையில் தொற்றுறுதி- உயிரிழந்த கைதி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

முதல் பரிசோதனையில் தொற்று இல்லை..! இரண்டாவது பரிசோதனையில் தொற்றுறுதி- உயிரிழந்த கைதி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

மஹர சிறைச்சாலையில் இருந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த கைதி ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

2006 ஆம் ஆண்டு மனித கொலை தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 82 வயதான கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கினிகத்தேனை பகுதியை சேர்ந்த அவர், மேலும் 112 கைதிகளுடன் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கடந்த 11 ஆம் திகதி மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் போது 2 கைதிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

பின்னர் அவர்கள் கந்தகாடு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பட்டிருந்த நிலையில் ஏனையவர்கள் 2 சிகிச்சை அறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதி ஒருவரே உயிரிழந்ததுடன் சிறைச்சாலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது தொற்றுறுதியாகவில்லை.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 8 பேருக்கு கொவிட் 19 தொற்றுதியாகியுள்ளது.

கொழும்பில் இருந்து மஸ்கெலியா பிரதேசத்திற்கு வருகை தந்த ஒருவரின் குடும்ப உறுப்பினர்களின் சிலருக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம், நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து இன்றைய தினம் மேலும் 428 நோயாளர்கள் குணமடைந்தனர்.

இதற்கமைய 14 ஆயிரத்து 497 பேர் இதுவரையில் இந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறி இருப்பதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது ஐந்தாயிரத்து 587 பேர் கொவிட் 19 நோய்தொற்றுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரையில் 20 ஆயிரத்து 171 பேர் கொவிட் 19 நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் 446 குடும்பங்களை சேர்ந்த 910 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் கொவிட் 19 நோயாளிகள் நோயாளர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொகு போதாகம இதைன தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆயிரத்து 369 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 578 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் இரத்தினபுரி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக வழிநடத்திச் செயற்படுவதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.