இன்றைய தினம் 5 சதவீதமான மாணவர் வருகையே பதிவானது- ஆசிரியர் சங்கங்கள்
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த பகுதிகளில் தரம் 6 முதல் 13 ஆம் தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
எவ்வாறாயினும், இன்று 5 வீதமான மாணவர் வருகையே பதிவானதாக ஆசியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
குறைந்தளவான மாணவர் வருகை தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.
அந்த மாகாணத்தில் இன்றைய தினம் 15 வீத மாணவர் வரவு பதிவாகியுள்ளது.
எனினும் மேலும் சில பகுதிகளில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அந்தந்த பகுதிகளில் காணப்படும் கொவிட்-19 பரவல் நிலைமைக்கு அமைய பாடசாலைகளை திறக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரி மற்றும் சுகாதார தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வடமேல் மாகாணத்தில் 48 பாடசாலைகளும், மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் 14 பாடசாலைகளும் இன்று திறக்கப்படவில்லை.
அத்துடன் சப்ரகமுவ மாகாணத்தில் 12 பாடசாலைகள் இன்று மூடப்பட்டிருந்ததோடு கிழக்கு மாகாணத்தில் 6 பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
தென் மாகாணத்தில் ஒரு பாடசாலை மூடப்பட்டதோடு ஊவா மாகாணத்தில் எந்த பாடசாலைகளும் மூடப்படவில்லை.
அத்துடன் மத்திய மாகாணத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் சிலவற்றின் கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்படவில்லை என மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் ஹட்டன் வலயத்திற்கு உட்பட்ட சில பாடசாலைகளும் கண்டி–அக்குறனை மற்றும் மஹிய்யாவ பகுதிகளை சேர்ந்த பாடசாலைகள் சிலவற்றின் கற்றல் செயற்பாடுகளும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பகுதிகளில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் சிலர் அடையாளங் காணப்பட்டதையடுத்து கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
உரிய சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர், குறித்த பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அதிபர்கள் மேற்கொள்வார்கள் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.