குருநாகல் பிரதான அஞ்சல் அலுவலகத்தின் பணிக்குழாமினரில் 14 பேருக்கு கொரோனா

குருநாகல் பிரதான அஞ்சல் அலுவலகத்தின் பணிக்குழாமினரில் 14 பேருக்கு கொரோனா

குருநாகல் பிரதேச அஞ்சல் அதிகாரி காரியாலயம் மற்றும் குருநாகல் பிரதான அஞ்சல் அலுவலகத்தின் பணிக்குழாமினரில் 14 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அரலகங்வில காவல்துறையின் உப காவல்துறை பரிசோதகர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இந்த நிலையில் அவர்களுடன் தொடர்புடைய 91 காவல்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 136 பேருக்கு பி.சீ.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அரலகங்வில காவல்துறை நிலையத்திற்கு பிறிதொரு காவல்துறை அதிகாரிகள் கடமைக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில் மாத்திரம் இதுவரை 3 ஆயிரத்து 59 கொவி;ட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2 ஆயிரத்து 982 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதேநேரம் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் இதுவரை 13 ஆயிரத்து 189 கொவிட் 19 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அவர்களில் 7 ஆயிரத்து 42 பேர் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய ஆயிரத்து 560 பேருக்கும், முன்னதாக உள் நாட்டில் ஆயிரத்து 962 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானதாக வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், 13 ஆயிரத்து 589 பேர் குணமடைந்து நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில், 6 ஆயிரத்து 98 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை நாட்டில் 83 கொவிட் 19 மரணங்களும் சம்பவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் மாத்திரம் 10 ஆயிரத்து 514 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் 491 பீ.சி.ஆர் மாதிரிகளில் தொற்றுறுதியானதாகவும், மேலும் 831 பீ.சீ.ஆர் மாதிரிகளுக்கான முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் இதுவரையில் 4 இலட்சத்து 18 ஆயிரத்து 287 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.