மத்திய அதிவேக நெடுஞ்சாலையை அமைத்ததில் பல்வேறு முறைக்கேடுகள்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை அமைத்ததில் பல்வேறு முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பான தகவல்கள் பொது முயற்சியாண்மை குழு எனப்படும் கோப் குழுவில் தெரியவந்துள்ளது.
நெடுஞ்சாலையை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளுக்காக மாத்திரம் 1.7 பில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கோப் குழு நேற்று (21) பாராளுமன்றத்தில் கூடிய போது இது குறித்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தையில் இருந்து மீரிகம வரையான பகுதிக்கான முதற்கட்ட நிர்மாண பணிகள் கடந்த 2015 முதல் 2019 வரை தாமதமாகியதால் 8 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
நெடுஞ்சாலை சாத்தியக்கூறு ஆய்வுக்கு நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்காக கொள்முதல் செயன்முறை இல்லாமல் செய்யப்பட்டது என்பதும், கடந்த 2012 ஆம் ஆண்டில் வடக்கு அதிவேக நெடுஞ்சாலையாக 3 கட்டங்களாக இருந்த திட்டம் 2015 ஆம் ஆண்டளவில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையாக 4 கட்டங்களாக மாற்றப்பட்டுள்ளமையும் இதன்போது தெரிய வந்துள்ளது.
ஆரம்ப திட்ட மாற்றத்தால் ஏற்பட்ட நிதி இழப்பு குறித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் தற்போதைய நிலை குறித்தும் கோப் குழுவின் தலைவர் விசாரித்துள்ளார்.
அத்துடன் கடவத்தை முதல் மீரிகம வரையான வீதியை அமைக்கும் பணிகள் 5 சதவீதம் நிறைவடைந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
மீரிகம முதல் குருணாகல் வரையான பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், அந்த வீதியின் நிர்மாண பணிகள் அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் கோப் குழுவில் தெரிவித்துள்ளார்.