நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்!

திருத்தப் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக, தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்றிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மின் பிறப்பாக்கி இயந்திரங்களின் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக. மின்சாரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, திருத்தப்பணிகள் ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில், 300 மெகாவோட் மின்சாரத்தை, நேற்று இரவு முதல் மீண்டும் வழங்க முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மூன்றாம் நிலை மின் பிறப்பாக்கி இயந்திரத்தின்  திருத்தப் பணிகள் அடுத்தவாரம் நிறைவடையவுள்ளதாக சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், திருத்தப்பணிகள் முழுமையாக நிறைவடைந்ததன் பின்னர் தேசிய மின் கட்டமைப்புக்கு 600 மெகாவோட் மின்சாரத்தை வழங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு, அலுவலக பணியாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.