
கல்வி முறைமை தொடர்பாக முன்னாள் சபாநாயகரின் கோரிக்கை!
சிறுவர்களுக்கு நட்புறவானதும் சமத்துவமானதுமான கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான பாரிய போட்டிக் களமாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது அபாயகரமான போட்டித் தன்மைக்கு குழந்தைகளை உட்படுத்துவதாகவும் கரு ஜயசூரிய தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த பரீட்சையானது கல்வி முறைமையின் அபாயகர தன்மையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, சிறுவர்களுக்கு நட்புறவானதும் சமத்துவமானதுமான கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டியது உடனடித் தேவையாகும் எனவும், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.