இந்த செயற்பாடு முழு நாட்டையும் பாதிப்புக்கு உள்ளாக்கலாம் - வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிக ஆபத்தான பிரதேசமாகவுள்ள கொழும்பு மாவட்டத்தில் வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான விபரங்களை திரட்டும் நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படா விட்டால் அதுமுழு நாட்டிற்கும் நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்துமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் அவ்வாறு வைரஸ் தொற்று நோயாளர்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கைகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ,
கொரோனா வைரஸ் தொற்றின் கேந்திரமாக தற்போது கொழும்பு திகழ்கிறது. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டலின் கீழ் மேற்படி விபரங்கள் முறையாக திரட்டப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
விரைவாக மேற்கொள்ள வேண்டிய அந்த செயற்பாடுகளில் தாமதம் நிலவுவதையே காணமுடிகிறது.
குறைந்தபட்சம் மாவட்ட பணிப்பாளரினால் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு முறையாக இந்த விபரங்கள் பெற்றுக் கொடுப்பதைக் காண முடியவில்லை.
பொருளாதார ரீதியில் மிக முக்கியமான மாவட்டமாக கொழும்பு இருப்பதுடன் மாவட்டத்திற்கு பொறுப்பான சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முறையற்ற இந்த செயற்பாடு முழு நாட்டையும் பாதிப்புக்கு உள்ளாக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.