
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
இதன்படி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின்போது குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் தோற்றிய பாடங்களுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகளே முதலில் ஆரம்பிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தற்போது காணப்படும் சூழ்நிலையின் அடிப்படையில் மேல் மாகாணத்தில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளை உரிய திகதியில் நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும் இது குறித்து பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்னர், பாடசாலைகளின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.