மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது-காவற்துறை தலைமையகம்

மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது-காவற்துறை தலைமையகம்

மாவீரர் நாள் நிகழ்வுகளை எதிர்வரும் 29ம் திகதி வரையில், நடத்துவதற்கு வவுனியா மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றங்கள் தடை விதித்திருப்பதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி, வவுனியா மற்றும் மன்னார் தலைமையக காவல்துறையினர் மாவட்ட நீதவான் நீதிமன்றங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குற்றவியல் வழக்குகள் சட்டத்தின் 106 (1) ஆம் பிரிவின் பிரகாரம், இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிநீதிமன்றங்களில், காவல்துறையினர் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, வவுனியா மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட 8 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

வவுனியா காவல்துறை அதிகார பிரிவில், தோணிக்கல், ஏ-9 வீதி, வவுனியா பிரிவு காவல்துறை அதிகார பிரதேசம் ஆகியனவற்றில், இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த குறித்த தரப்பினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட 14 பேருக்கும், மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மன்னார் நீதிமன்ற அதிகார பிரதேசத்தில் இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த குறித்த தரப்பினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொதுமக்கள் போர்க்காலத்தில் இறந்த தங்களது உறவினர்களுக்கு அஞ்சலி செய்வதற்கு தடை ஏற்படுத்தக்கூடாது என வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்திருந்த மனு இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது.