பொது மக்களிடம் இராணுவத்தளபதி முன்வைத்துள்ள கோரிக்கை..!
வீட்டில் இருக்கின்ற முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்கள், ஏதேனும் அசௌகரியங்களுக்கு உட்படுவார்களாக இருந்தால், அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் ஜனாதிபதியும் அவதானம் செலுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மைய நாட்களில் வீட்டில் மரணிக்கின்ற முதியவர்கள் மற்றும் நெடுநாள் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படுகின்ற பீ.சீ.ஆர்.பரிசோதனைகளில், சிலருக்கு கொவிட்19 தொற்று இருக்கின்றமை தெரியவந்தது
இந்தநிலையில் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள முதியவர்கள் மற்றும் நெடுநாள் நோயாளிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்வதன் மூலம், அவர்களது நலன்தொடர்பில் அவதானம் செலுத்த முடியும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நடமாட்ட கட்டுப்பாடுகளை மீறுவோரை கைது செய்வதற்கு தொடர்ந்தும் ஆளிலில்லா விமான தொழிநுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் தங்களது வீடுகளிலேயே இருப்பதாக புலனாய்வு பிரிவு அறிக்கை தெரிவித்துள்ளது
சிலர் அதனை மீறி செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
அவ்வாறானவர்களை கைது செய்வதற்கு தொடர்ந்தும் ஆளிலில்லா விமானங்களின் ஊடாக தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாணந்துறை - தொடவத்தை பகுதியில் நடத்தி செல்லப்பட்ட தனியார் வகுப்பினது ஆசிரியர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், அந்த வகுப்பில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களும் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த வகுப்பை நடத்தி சென்ற ஆசிரியருக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு தீர்மானித்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆளில்லா விமான கருவிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமூக இடைவெளியை பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.