33 தனிமைப்படுத்தல் மையங்களில் 3,419 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்...!
முப்படையினரால் முன்னெடுக்கப்படும் 33 தனிமைப்படுத்தல் மையங்களில் 3 ஆயிரத்து 419 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் நாட்டில் இதுவரையில் 69 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன
கொவிட்-19 காரணமாக நாட்டில் நேற்றைய தினம் 3 மரணங்கள் பதிவாகின.
கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
நீரிழிவு நோயுடன் கொவிட் -19 தொற்றுறுதியானமையே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், கொழும்பு 12 சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் மரணித்தார்.
அவர் கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.
உயர் குருதி அழுத்தம், நீரிழிவு மற்றும் கொவிட் 19 - தொற்றால் நுரையீரல் பலவீனமடைந்தமையே இந்த மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவரும் கொவிட்-19 தொற்றால் மரணமானார்.
அவர் தனது வீட்டில் வைத்தே உயிரிழந்துள்ளார்.
நீரிழிவு மற்றும் கொவிட்-19 தொற்றே இந்த மரணத்திற்கு காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை மன்னாரில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கொரோனா காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும், கொவிட்19 ஆல் மரணிப்போரை அவரவர்களது மாவட்டங்களிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதேவேளை, ;நாட்டில் இதுவரையில் 18 ஆயிரத்து 402 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 12 ஆயிரத்து 587 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தொற்றுறுதியான 5 ஆயிரத்து 746 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் நேற்றைய தினம் பதிவான 327 கொவிட்-19 நோயாளர்களில், அதிகமானனோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
நேற்று 157 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
111 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 6 பேர் இரத்தினபுரி மாவட்டத்திலும் பதிவாகியுள்ளனர்.
இன்று காலை 6 மணிவரையான நிலவரப்படி, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன்சந்தைக் கொத்தணிகளில் 14 ஆயிரத்து 889 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 3 ஆயிரத்து 59 பேர் மினுவாங்கொடை கொத்தணியிலும், 11 ஆயிரத்து 830 பேர் பேலியகொடை கொத்தணியிலும் பதிவாகியுள்ளனர்.
இந்த இரண்டு கொத்தணிகளிலும் 9 ஆயிரத்து 162 பேர் இதுவரையில் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.