
ஹம்பாந்தோட்டை துறைமுக பிராந்தியத்திற்காக முதலீட்டு ஒப்பந்தம் கைச்சாத்து!
ஹம்பாந்தோட்டை துறைமுக பிராந்தியத்துக்காக முதல் முறையாக நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமைய நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான மற்றொரு திருப்புமுனையாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலீட்டு ஊக்குவிப்பு சபை, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் மற்றும் shandong haohua tire நிறுவனம் ஆகியோருக்கு இடையில் இந்த முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஒப்பந்தத்தின் பெறுமதி 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த முதலீட்டு ஒப்பந்தத்தின் ஊடாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இதன்மூலம் வருடாந்தம் 25 மில்லியன் மோட்டார் வாகன மற்றும் ட்ரக் வண்டிகளுக்கான டயர்களை ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுக பிராந்தியத்தில் தொழிற்சாலைகளுக்காக 120 ஏக்கருக்கும் அதிகமான இடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதானமாக தென்னாசியா மற்றும் MENA எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க சந்தைக்காக 20 ஆயிரம் கொள்கலன்களை களஞ்சியப்படுத்தக்கூடியதாகவிருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் மூலம் மேலும் பல நன்மைகள் நாட்டுக்கு கிடைக்கும் எனவும் வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.