நாட்டை மீண்டும் உலுக்கும் கொரோனா! வடக்கில் அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள நடவடிக்கை
நாட்டை மீண்டும் உலுக்கிக் கொண்டிருக்கும் கொவிட் - 19 தொற்றை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், வடக்கைப் பொறுத்தவரையில் கடல் வழியாகவும் கொரோனா பரவும் அபாயம் காணப்படுன்றமையினால் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான விசேட மருத்துவமனையொன்றின் தேவை வடக்கிலே ஏற்பட்டுள்ளமையினால் அதுதொடர்பாக சுகாதார அமைச்சர் கவனத்தில் கொள்வார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
'இந்தியாவிலிருந்து எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்களுடன் எவ்விதமான தொடர்புகளையும் வைத்திருக்கக்கூடாதென எமது கடற்றொழிலாளர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றோம்.
அதுமட்டுமல்லாது அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகின்ற ஒரு சில கடற்றொழில் முறைமைகளையும் தற்காலிகமாகத் தடை செய்துள்ளோம்.
அண்மையில் பேலியகொடை மத்திய மீன் விற்பனை சந்தையிலும் வர்த்தகர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் காரணமாக சந்தையை தற்காலிகமாக மூடியிருக்கின்றோம்.
எனினும், தற்போது நாட்டில் மீன் அறுவடைகள் அதிகமான காலம் என்பதால், கடற்றொழிலாளர்களை பாதிப்படைய விடாமல் அவர்களது அறுவடைகளை எமது மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மூலமாக நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்கும் நுகர்வோருக்கு இலகுவாகவும் நியாய விலையிலும் கிடைக்கச் செய்வதற்குமான ஏற்பாடுகளையும் களஞ்சியப்படுத்தும் வசதிகளையும் முன்னெடுத்து வருகின்றோம்”. என்று தெரிவித்தார்.