கொரோனாவை விடவும் ஆபத்தான நோய் - இவ்வருடத்தில் 34 பேர் பலி
கொரோனாவைப் போன்று டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவை மையமாகக் கொண்டு சுகாதார அமைச்சர் தலைமையில் டெங்கு ஒழிப்பு மற்றும் பொது மக்களை அறிவூட்டும் திட்டமொன்றும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி,
கொரோனா நிலைமையை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளைப் போன்று மனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ள டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தவும் திட்டமொன்று செயல்படுத்தப்படுகின்றது.
கொரோனா காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகளவு உயிரிழப்புகள் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்டுள்ளன. இவ்வருடம் 34 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டினார்.இது கொரோனாவை விட மோசம் என்றார்.
எமது சுற்றாடலை சுத்தம் செய்து அரசுமேற்கொள்ளும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
2020ம் ஆண்டு இரண்டாவது காலாண்டுப் பகுதியில் இலங்கை பூராவும் 4311 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதோடு கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவு நோயாளர்கள் காணப்பட்டார்கள்.
கண்டி மாவட்டத்தில் 715 டெங்கு நோயாளிகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 668 டெங்கு நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டார்கள். இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலேயே அதிகளவு அதாவது 169 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டார்கள் என தெரிவித்தார்.