குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஆகியன இன்று முதல் மீண்டும் பொதுமக்கள் சேவைகளுக்காக திறக்கப்படவுள்ளன.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமக்கான திகதி மற்றும் நேரம் ஆகியவற்றை ஒதுக்கிக் கொண்டவர்கள் மாத்திரமே இன்று முதல், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்படவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் நிலைமைக்கு அமைவாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தமக்கான திகதி மற்றும் நேரம் ஆகியவற்றை ஒதுக்கிக் கொள்ளாத பொதுமக்களுக்கு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலக வளாகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், eservices.immigration.gov.lk/td எனும் இணையத்தள முகவரி ஊடாக, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு வருகை தருவதற்கான திகதி மற்றும் நேரம் ஆகியவற்றை ஒதுக்கிக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 070 710 10 60 மற்றும் 070 710 10 70 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலமும் பொதுமக்கள் ஒதுக்கீடுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மறு அறிவித்தல் வரை இந்த செயற்றிட்டம் நடைமுறையில் இருக்கும் என, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.