நாதுன்கமுவ பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட வர்த்தகர் உள்ளிட்ட நால்வர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி வெலிவேரிய-நாதுன்கமுவ பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் சட்டவிரோத புதையல் அகழ்வில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் இன்று அதிகாலை (15) கைது செய்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் வீட்டின் உரிமையாளர், கம்பஹா-மிரிஸ்வத்த பிசேத்தில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மற்றும் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அகழ்வு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிவேரிய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.