ஆட்பதிவு திணைக்கள செயற்பாடுகள் இடைநிறுத்தம்
ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 5 நாட்களுக்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படவுள்ளன.
இதனிடையே, கொழும்பு மாநகர சபையின் பொதுமக்கள் சேவை தினம் மீள் அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கம்பஹாவில் வசிக்கும் உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் மக்கள் ஒன்றுகூடும் வகையிலான நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சிறுவர் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், உடற்கூற்று சிகிச்சை நிலையங்கள் மற்றும் நீச்சல் தடாகங்களையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் தங்களின் அலுவலகத்திற்கு வருகை தருமாறு கொழும்பு மாநகர சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.