மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவு..!
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறு, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலாளிமார்கள், தனியார் துறை தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அரசாங்கம் வெளியிட்டுள்ள சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைய, அந்த தொழிற்சாலையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டனவா என்பதை ஆராய்வது இதன் நோக்கமாகும் என அமைச்சின் செயலாளர் எம்.பீ.யூ.டீ.கே. மாபா பத்திரண தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா வைரஸ் பரவலின் போது முதலாளிமார், தனியார் பிரிவு தொழிற்சங்கம் மற்றும் தொழில் அமைச்சு இணைந்து கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்துப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வது குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்ததுடன் அந்த ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இதனை மீண்டும் நடைமுறைபடுத்துவது தொடர்பில் நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் தொடர்பான ஆவணத்தை தமக்கு கையளிக்குமாறு தொழில் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தொழில் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.