நாட்டின் அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கொரோனா தொற்று நிலைமையின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய முறைமை மற்றும் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவினால் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சின் செயலாளர் MMPK மாயாதுன்னேவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வழக்கு விசாரணைகளுக்கு உரிய தினங்களுக்கு பதிலாக வேறு தினங்களை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு விசாரணைகளுக்காக வழங்கப்படும் வேறு தினங்கள் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் காட்சிப்படுத்துமாறும் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவினால் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, உரிய நீதிமன்றங்களுக்கு சென்று தமது வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் தினத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.