2 மாதங்களுக்கு பின்னர் சமூகத்தில் கொரோனா பரவல்- ஜனாதிபதியின் முக்கிய அறிவுறுத்தல்

2 மாதங்களுக்கு பின்னர் சமூகத்தில் கொரோனா பரவல்- ஜனாதிபதியின் முக்கிய அறிவுறுத்தல்

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் சமூகத்தில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டமை தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட் நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியுடன் நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

கொவிட்-19 தடுப்புக்கு அரசாங்கம் வழங்கி இருந்த அறிவுரைகளை பின்பற்றுதல் மக்கள் மத்தியில் குறைவடைந்ததே நோய் தொற்றியதற்கான அடிப்படை காரணமாகும் என்று வைத்தியர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

சாதாரணமாக கொவிட்-19 நோய்த் தொற்று உள்ளதை பொதுமக்கள் மறந்துள்ளதாக ஜனாதிபதி; குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவனங்களிலும், தெரிவின் அடிப்படையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தப்பட வேண்டும்.

விசேடமாக குழுக்கள் அடிப்படையில் அதிகமானோர் தொழில் புரியக்கூடிய நிறுவனங்களில் பி.சி.ஆர் பரிசோதனையை தெரிவின் அடிப்படையில் அடிக்கடி நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், தொழிற்சாலையில் அது முறையாக இடம்பெறவில்லை என்பது தற்போது தெரிய வருகின்றது.

தற்போதைய நிலைமையை புரிந்துகொண்டு மீண்டும் அதனைத் தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாரிய பொறுப்புள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.