இரண்டு கோர விபத்துக்கள்!
ஹூங்கம, ரன்ன வீரகெட்டிய வீதியின் நூலக வீதிக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரன்ன பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மீரிகம - திவுலபிட்டிய வீதியில் ஏற்பட்ட மற்றுமொரு விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரேந்தபொல பகுதியில் இருந்து மீரிகம நோக்கி பயணித்த கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்றுகொண்டிருந்த பெண் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி பெண், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ரேந்தபொல, மீரிகம பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஆவார்.
காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீரிகம பொலிஸார் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.