சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்ட 27 பேர் போதைப்பொருளுடன் கைது!

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்ட 27 பேர் போதைப்பொருளுடன் கைது!

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் ஹட்டன் வழியாக சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்ட 27 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் காவல்துறை மோசடி ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதி மற்றும் ஹட்டன் தொடருந்து நிலையம் ஆகிய இடங்களில், போதைப்பொருளுடன் யாத்திரை மேற்கொள்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 18 மற்றும் 30 வயதுகளுக்கு இடைப்பட்ட குருணாகல், காலி, அனுராதபுரம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இன்றும் சிவனொளிபாதை மலை யாத்திரைக்கு கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்களை நல்லதண்ணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சிவனொளிபாத மலை புனித ஸ்தலம் என்பதால், யாத்திரைக்கு வருகை தருபவர்கள் அதனை கருத்திற்கொண்டு செயற்படுமாறு ஹட்டன் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.