தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு- தலைமை செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு- தலைமை செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு கடந்த 5 நாட்களாக 3 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி உள்ளது.

 


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மதுரை, தஞ்சை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்றதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நேற்று முடிவடைந்து உள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று பிற்பகலில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் அது தொடர்பான அச்சம் இல்லை.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முக கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும். கூட்டமாக கூடாமல் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
 

ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவது வாடிக்கையாகி விட்டது. இதையடுத்து இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

 

பிரதமர் மோடி


இன்று எடுக்கப்படும் முக்கிய முடிவுகளின் தகவல்களை நாளை பிரதமர் மோடியுடன் நடைபெறும் ஆலோசனையின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பின்னர் நாளை மாலை தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் வருகிற 9-ந்தேதி முதல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வதந்தி பரவி வருகிறது.

இதுதொடர்பாக நேற்று சமூக வலைதளங்களில் வெளியான அறிக்கையை பலரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி இது உண்மையா? என்று கேட்டனர்.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மக்களை மீண்டும் முடக்கும் அளவுக்கு கடுமையான ஊரடங்கு இருக்காது’’ என்று விளக்கம் அளித்தனர். அதே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.