பிரம்மாண்டமாக மாறும் கட்டுநாயக்க, யாழ்ப்பாணம்! தினசரி 6 மில்லியன் நஷ்டத்தில் மத்தல! ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்த விசேட கலந்தாய்வுக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டின் பிரதான விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வது குறித்து இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.
கட்டுநாயக்கவிற்கு 30 வருடப் புதிய மாஸ்டர் பிளான்!
இலக்கு: எதிர்வரும் 2055ஆம் ஆண்டளவில் வருடாந்த பயணிகள் கொள்ளளவை 24.2 மில்லியனாக அதிகரிக்கும் நோக்கில், அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையிலான புதிய அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடு: இத்திட்டத்தை 3 வருடங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2027 திட்டங்கள்: கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், வருகை மற்றும் புறப்பாடு முனையங்களை விரிவுபடுத்தல், புதிய முனையம் அமைத்தல் மற்றும் சேமிப்பு கிடங்குகளை விரிவுபடுத்தும் பணிகள் 2027க்குள் நிறைவு செய்யப்படும்.
டிஜிட்டல் மயமாக்கல்: விமான நிலைய சேவைகளை இலகுபடுத்த டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நஷ்டத்தில் இயங்கும் மத்தல விமான நிலையம்!
கூட்டத்தின் போது மத்தல விமான நிலையம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின:
மத்தல விமான நிலையம் தற்போது ஒரு நாளைக்கு 6 முதல் 7 மில்லியன் ரூபாய் வரை (வருடத்திற்கு சுமார் 4 பில்லியன் ரூபாய்) நஷ்டத்தை எதிர்கொள்கிறது.
இந்நிலையைத் தவிர்க்க புதிய முதலீட்டுத் திட்டங்கள் கோரப்பட்டுள்ளதோடு, 2027ஆம் ஆண்டிற்குள் இதற்கான தீர்வு எட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய விமான நிலையங்கள்
யாழ்ப்பாண விமான நிலையம்: யாழ். சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தை நவீனமயமாக்கி, வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஹிங்குராக்கொட விமான நிலையம்: உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், விமானப்படையுடன் இணைந்து கூட்டு மீளாய்வு அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
துறைமுக அபிவிருத்திப் பணிகள்
ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் காங்கேசன்துறை (KKS) துறைமுக மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் பிரதான அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
ஜனாதிபதியின் கண்டிப்பான உத்தரவு:
"மக்களின் வரிப்பணத்திற்குப் பாரமாக இல்லாத வகையில், நிறுவனங்களின் சொந்த நிதி பலத்தைப் பயன்படுத்தி அபிவிருத்திகளை மேற்கொள்ளுங்கள். அரச திறைசேரிக்கு உங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்குங்கள்."
இக்கூட்டத்தில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.