அரிசியைப் பயன்படுத்தி புதிய உற்பத்திகள் - ஜனாதிபதி

அரிசியைப் பயன்படுத்தி புதிய உற்பத்திகள் - ஜனாதிபதி

நாட்டின் அரிசி நுகர்வை உணவாக மாத்திரம் மட்டுப்படுத்தாமல், அரிசி சார்ந்த ஏனைய துணை உற்பத்திகளுக்கும் பயன்படுத்துவதன் மூலம் அரிசிக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

கெபித்திகொல்லாவ பிரதேசத்தில் புதிய நீர் திட்டமொன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

கடந்த காலங்களில் நாட்டின் நெல் உற்பத்தி குறைந்த மட்டத்தில் இருந்ததால், அரிசியிலிருந்து ஏனைய உற்பத்திகளை மேற்கொள்வதைத் தடை செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்ததாகவும், தனது அரசாங்கம் அந்த வர்த்தமானி அறிவித்தலை நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது தெரிவித்தார். 

நெல் உபரி காணப்படும் காலங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தவிர்த்து, சந்தையில் நெல்லுக்கான அதிக போட்டித்தன்மையையும் நியாயமான விலையையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கூறினார். 

எதிர்காலத்தில் நாட்டில் சோறு தவிர, கால்நடைத் தீவனம், பியர், வைன், பிஸ்கட் மற்றும் கேக் வகைகள் உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கு அரிசியைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

அறுவடைக்குப் பிந்தைய விரயத்தைத் தடுக்கும் நிறுவனங்கள், அரிசியைக் கொண்டு உற்பத்தி செய்யக்கூடிய பல உணவு மற்றும் பான வகைகளை ஏற்கனவே ஆராய்ச்சி மட்டத்தில் கண்டறிந்துள்ளதாகவும், அவற்றை விரைவில் வணிக ரீதியாகச் சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். 

இதன் மூலம் நெல் கொள்வனவு செய்வதற்கு சாதாரண ஆலை உரிமையாளர்களுக்கு மேலதிகமாக, வைன், பிஸ்கட் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தியாளர்களும் போட்டித்தன்மையுடன் சந்தைக்கு வருவதால், விவசாயிகளுக்குத் தமது அறுவடைக்கு மிகவும் நியாயமான மற்றும் அதிக விலையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

அதன்படி, பயிர்ச் செய்கையின் உற்பத்தித்திறனையும் உழைப்பையும் மேலும் அதிகரித்து, இந்த புதிய சந்தையை இலக்காகக் கொண்டு நெல் பயிர்ச் செய்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.