இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84. 1977-ல் வெளியான இவரின் முதல் படமான '16 வயதினிலே' வெற்றிப்படமாக அமைந்தது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்குமான தமிழக அரசின் விருது பெற்றார். இதனை தொடர்ந்து பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். ராதா, ராதிகா, ரேவதி உள்ளிட்ட நடிகைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இவர்.

ஸ்டுடியோவிற்குள் இருந்த சினிமாவை கிராமத்திற்கு அழைத்துச் சென்று வாழ்வியலை காட்டியவர் என்ற பெருமைக்குரிய பாரதிராஜாவுக்கு இந்திய திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக 2004-ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.

இதனிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானதில் இருந்து பாரதிராஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. 

சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று பாரதிராஜா காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாரதிராஜாவின் மறைவையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் நேரில் சென்று பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா  உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா சாதனை, கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா துறையினர் வேண்டுகோள் விடுத்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.