
மருத்துவர்களின் இடமாற்றங்களில் பாரிய சிக்கல் நிலை
சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைப் பிரிவின் செயற்பாடுகள் காரணமாக, நாட்டில் 23,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் இடமாற்றங்களில் கடுமையான பிரச்சினைகள் எழுந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இந்த குற்றச்சட்டை சுமத்தியுள்ளது.
மருத்துவர்களின் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பாக பல தீவிரமான பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளரான வைத்தியர் சமில் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால் சுகாதார அமைப்பு முறையில் தேவையற்ற நெருக்கடி ஒன்று உருவாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடமாற்ற நடைமுறைகள் நிறுவன விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைப் பிரிவு தன்னிச்சையாக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இந்தப் பிரச்சினைகள் தற்போது உருவாகியுள்ளதாகவும் வைத்தியர் சமில் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நாட்டில் சுமார் 23,000 மருத்துவர்களின் இடமாற்றங்களில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் இடமாற்றங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் உள்ள மருத்துவர்களில் கிட்டத்தட்ட 50% பேர் தமக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளில் இல்லாமல், வேறு இடங்களில் பணியாற்றி வருவதாகவும் வைத்தியர் சமில் விஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.