மாணவர்கள் விடுத்த கோரிக்கையினை விரைவாக நிறைவேற்றினேன்: பிரதமர் வெளியிட்டுள்ள பெருமிதம்!

மாணவர்கள் விடுத்த கோரிக்கையினை விரைவாக நிறைவேற்றினேன்: பிரதமர் வெளியிட்டுள்ள பெருமிதம்!

கொவிட்- 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாடசாலையை கூடிய விரைவில் ஆரம்பிக்குமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கையை, அவர்களின் பாதுகாப்பு குறித்த மிகுந்த அக்கறையுடன் தம்மால் நிறைவேற்ற முடிந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு இந்து கல்லூரியின், வருடாந்த பரிசளிப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“மாணவர்களை பண்படுத்தி வழிப்படுத்துவதில் பாடசாலைகளே முதன்மை வகிக்கின்றன. ‘ஒரு பாடசாலை திறக்கப்படும்போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படும்’ என்பது பழமொழி.

நல்ல மாணவர்களை உருவாக்குதல் பாடசாலைகளின் பணியாவதுடன், அவர்களின் எதிர்காலத்தினை நல்வழிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பும் கடப்பாடும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடையதாகும்.

நாட்டின் வளம் என்பது நல்ல மாணவர்களை உருவாக்கி கல்வியில் முன்னிலையில் இருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்து சுபீட்சமான வாழ்வினைக் கொண்டாடும் சமூகச்சூழலை ஏற்படுத்தி முழு நாட்டினையையும் செல்வச் செழிப்புடன் ஆக்கும் ஒருபெரும் முயற்சியாகும். கல்வியால் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை எக்காரணியும் ஏற்படுத்த முடியாது என்பதில் ஐயமில்லை.

கல்விச் செல்வமே அழியாததும் பிறர் கொள்ளை கொண்டு போக முடியாததுமாகும். கல்வியை வழங்கும் ஒவ்வொரு நிறுவனமும் நாட்டிற்குரிய நற்பிரஜைகளை உருவாக்கும் உன்னத சேவையை ஆற்றுகின்றன.

30 ஆண்டுகால யுத்தத்தை நிறைவுசெய்து நாட்டில் சமாதானத்தினை கட்டியெழுப்பி நாட்டின் அபிவிருத்தியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். போரின் பின்னர் நாட்டினை கட்டியெழுப்ப வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பல திட்டங்களை எமது அரசாங்கம் அன்று கொண்டுவந்தது.

இன்று மக்கள் மீண்டும் எம்மை ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளனர். அவர்களின் ஆணையின் மூலம் மேலும் பல நிலைபேண்தகு அபிவிருத்தி செயற்திட்டங்களை மேற்கொள்ள எமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கல்விச் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி எம் நாட்டின் கல்வி வளர்ச்சியை மேன்நிலைக்கு கொண்டுசெல்வதே எமது இலட்சியமாகும்.

இன்று கொவிட்- 19 பிரச்சினையை உலகளாவிய சவாலாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். எமது நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் இப்பெரும் சவாலை கட்டுக்குள் வைத்துள்ளோம். இந்த பிரச்சினைகளினால் பாடசாலை பிள்ளைகளாகிய உங்களின் கல்வி பாதிப்படையக்கூடாது.

கொரோனா நிலைமை காரணமாக பாடசாலை விடுமுறை காலத்தில் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக மாணவர்களின் நிலைமைகளை செவிமடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன்போது பாடசாலையை விரைவாக ஆரம்பிக்குமாறு மாணவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கேற்ப முடங்கிக்கிடந்த நாட்டின் நிலைமைகளை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்து, பாடசாலை நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிக்கும் முயற்சியில் நாம் வெற்றிகண்டோம். பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை செலுத்தப்பட்டது.

கல்வியில் போன்றே மாணவர்கள் விளையாட்டு துறையிலும் ஈடுபட வேண்டும். உங்களை போன்றே வடக்கு கிழக்கு மற்றும் மலையக மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டமை அறிய முடிந்தது. எதிர்காலத்தின் தலைவர்களாக விளங்கும் நீங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.