விண்கல் தண்ணீர், டைனோசருக்கும் மூத்த தாவரம்: 400 மில்லியன் ஆண்டு கால ரகசியத்தை உடைத்த விஞ்ஞானிகள்

விண்கல் தண்ணீர், டைனோசருக்கும் மூத்த தாவரம்: 400 மில்லியன் ஆண்டு கால ரகசியத்தை உடைத்த விஞ்ஞானிகள்

தாவரங்களின் தண்டுப்பகுதியில் பாயும் நீரானது, பூமியில் உள்ள மற்ற எந்த பொருளிலும் காணப்படாதளவிற்கு விசித்திரமான 'ஆக்சிஜன் ஐசோடோப்பு' தன்மையைக் கொண்டிருப்பதாக தேசிய அறிவியல் அகாடமி இதழில் வெளியான புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

பூமியில் டைனோசர்கள் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அதாவது சுமார் 400 மில்லியன் ஆண்டுகளாக 'ஹார்ஸ்டெயில்' (Horsetail) எனப்படும் ஒரு வகை செடிகள் வாழ்ந்து வருகின்றன. பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தெரியும் இந்தத் தாவரத்திற்குள் ஒளிந்திருக்கும் ரசாயன அதிசயத்தை விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சக்கரி ஷார்ப் தலைமையிலான குழுவினர் தாவரத்தை ஆய்வு செய்தனர். அப்போது அதன் தண்டுப்பகுதியில் ஓடும் நீரானது, பூமியில் உள்ள மற்ற எந்தத் தாவரத்திலும் இல்லாத வகையில் விசித்திரமான 'ஆக்சிஜன் ஐசோடோப்பு' (Oxygen Isotope) அடையாளத்தைக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இந்த நீரின் ரசாயனத் தன்மை பூமியில் உள்ள பொருட்களை விட, விண்வெளியில் இருந்து விழும் விண்கற்களில் உள்ள நீரோடு அதிகம் ஒத்துப் போகிறது. இந்த நீரின் மாதிரியை மட்டும் என்னிடம் கொடுத்திருந்தால், இது ஏதோ ஒரு விண்கல்லில் இருந்து வந்தது என்றுதான் நான் சொல்லியிருப்பேன் என்று டாக்டர் ஷார்ப் வியப்புடன் கூறுகிறார். இந்தத் தாவரத்தின் தண்டுப்பகுதி வழியாக நீர் மேலே ஏறி ஆவியாகும்போது மேஜிக் நடக்கிறது. நீரில் உள்ள லேசான ஆக்சிஜன் மூலக்கூறுகள் ஆவியாகி முதலில் வெளியேறுகின்றன. இதனால், கனமான ஆக்சிஜன் அணுக்கள் தாவரத்தின் தண்டுக்குள்ளே தங்கிவிடுகின்றன. செடியின் நுனிப்பகுதிக்கு நீர் செல்லச் செல்ல, அதன் ரசாயன வீரியம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

ஹார்ஸ்டெயில் தாவரங்கள் பல கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வருவதால், அவற்றின் படிமங்களை ஆய்வு செய்வதன் மூலம் டைனோசர்கள் காலத்துச் சூழலை நம்மால் அறிய முடியும். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஈரப்பதம் எப்படி இருந்தது, காலநிலை எப்படி மாறியது போன்ற ரகசியங்களை இந்தத் தாவரங்கள் தங்கள் உடலுக்குள் 'டேட்டா'வாகச் சேமித்து வைத்துள்ளன. இந்தக் கண்டுபிடிப்பு வெறும் பழைய கதையல்ல; இது எதிர்காலக் காலநிலையை கணிக்கவும் உதவும். கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி நிலவும் சூழலில் தாவரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு ஒரு புதிய வழிகாட்டியாக இருக்கும்.