வரலாற்று சிறப்பு மிக்க கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம்

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த மஹோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது.

தானாக தோற்றம்பெற்ற ஆலயமாகவும், கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மஹோற்சவத்தையொட்டி கடந்த மூன்று தினங்களாக சாந்தி கர்ம கிரியைகள் இடம்பெற்றுவந்தன.

இந்த நிலையில் இன்று காலை மூலமூர்த்திக்கு அபிஷேக பூசையுடன் விசேட பூசை இடம்பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தினை சூழ வலம்வந்து கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் இடம்பெற்றுள்ளன.

அதனைத் தொடர்ந்து வேதபாராயணத்துடன் மேள நாதஸ்வர இசை முழங்க மணியோசைகளின் மத்தியில் பக்தர்களின் ஆரோகரா ஓசையுடன் கொடியேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த மஹோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.

இதனையடுத்து தம்பத்துக்கு விசேட அபிஷேகம் இடம்பெற்றதுடன் பூசைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம் வரும் நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கின் தேரோடும் கோயில் என்னும் பெருமையினை கொண்ட இந்த ஆலயத்தின் தேரோட்டம் எதிர்வரும் 06ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சுகாதார வழிமுறையுடன் நடைபெற்ற கொடியேற்றத்தினை தொடர்ந்து ஆலய பிரதம குருவினால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன் சுகாதார நடைமுறை குறித்தும் கருத்துரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.