பருத்தித்துறையில் பனம் கூடலில் பாரிய தீபரவல்!
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை, நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில் பின் வீதியில் உள்ள பனம் கூடலில் நேற்றைய தினம் வியாழக்கிழமை திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
இது தொடர்பில் அப்பகுதியில் வசிப்பவர்கள் பருத்தித்துறை நகரசபைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சபையின் குடிநீர் தாங்கி வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் காரணமாக மேலும் அயல் காணிகளில் இருந்த பனை மரங்கள் உள்ளிட்ட வற்றிற்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ பரவல் முற்றாக கட்டுப்பட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இதன்போது சுமார் 30 இற்கு மேற்பட்ட பனை மரங்கள் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. பனம் கூடலுக்கு அருகில் இருந்த இரு வீடுகளில் பகுதி அளவு சேதங்கள் ஏற்பட்டிருந்தன.
அதேநேரம் பிரதான மின் விநியோக வடமும் தீ பரவலில் இரண்டு இடங்களில் எரிவடைந்த நிலையில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வருகைதந்து உடனடியாக மின் இணைப்பை துண்டித்ததுடன் பாதிக்கப்பட்ட மின் வடத்தையும் சீர் செய்திருந்தனர்.