பசுபிக் பெருங்கடலில் சூறாவளி: இலங்கையில் மீண்டும் மழை தீவிரமடைய வாய்ப்பு!
தற்போது நிலவும் மழை நிலைமையில் நாளை (04) நண்பகல் முதல் குறைவொன்றை எதிர்பார்க்க முடிவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே இதனைத் தெரிவித்தார்.
இருப்பினும், தற்போது பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருவதாகவும், அதன் காரணமாக ஆறாம் திகதிக்குப் பிறகு மழை நிலைமை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இதன்படி மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அதிகளவில் மழையை எதிர்பார்க்கப்படுவதாக அஜித் விஜேமான்னகே தெரிவித்தார்.
"இந்த கொந்தளிப்பான வானிலை நிலைமை நாளை (04) நண்பகலாகும்போது படிப்படியாக நம்மை விட்டு விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும், தற்போது பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருகிறது. அந்த நிலைமை ஆறாம் திகதியளவில் மீண்டும் தீவிரமடைவதுடன், காற்றின் வேகம் அதிகரித்து, மீண்டும் ஆறாம் திகதிக்குப் பிறகு சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதியில் மழை பெய்யக்கூடும்." என்றார்.