முதலமைச்சர் விஜய் நாளை போலீசாருக்கு பதக்கங்கள் வழங்குகிறார்- அணிவகுப்பு மரியாதையும் நடைபெறுகிறது
முதலமைச்சர் விஜய் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்ததும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது.
முதலமைச்சர் விஜய் நாளை மாலை 4 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெறும் போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று பதக்கங்கள் வழங்க உள்ளார்.
முதலமைச்சர் பதக்கம்
தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் நாளை பதக்கங்களை வழங்க உள்ளார்.
பொதுமக்களுக்கு அனுமதி
முதலமைச்சர் விஜய் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்ததும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. அதை அவர் பார்வையிட்டு அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. போலீஸ் டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
இந்த விழாவில் போலீஸ் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பதக்கங்கள் வழங்கப்பட்ட பிறகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதை பொதுமக்களும் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.