அஸ்வெசும பயனாளர்களிடம் பணம் மோசடி: தொலைபேசி அழைப்புகள் குறித்து அவதானம்

அஸ்வெசும பயனாளர்களிடம் பணம் மோசடி: தொலைபேசி அழைப்புகள் குறித்து அவதானம்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பணப் பலன்களைப் பெறும் பயனாளர்களின் பணத்தை மோசடி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பாக அந்தச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு நபர்கள், வெவ்வேறு தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி அஸ்வெசும பயனாளர்களைத் தொடர்புகொண்டு, தாம் முதன்மை அலுவலக அதிகாரிகள் எனக் கூறி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, தகவல்களைப் புதுப்பிக்கும் செயல்முறை அல்லது வேறு காரணங்களைக் கூறி, அதற்காகத் தமக்கு பணத்தைச் செலுத்துமாறு அந்தத் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தற்போது பதிவாகியுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்தச் செயலானது நலன்புரி நன்மைகள் சபையின் எவ்வித அனுமதியோ அல்லது அறிவோ இன்றி முன்னெடுக்கப்படுவதால், இது குறித்து உடனடியாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும், இவ்விடயம் தொடர்பில் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு தௌிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், இது போன்ற தொலைபேசி அழைப்புகள் ஏற்கனவே கிடைத் திருப்பின், அஸ்வெசும பயனாளர்களின் ஊடாக அந்தந்தப் பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நலன்புரி நன்மைகள் சபை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.