கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் மோதிய பறவை… ஆபத்தில் இருந்து தப்பிய பயணிகள்!
புதிய இணைப்பு
கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்று (11) காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோதே இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்திருந்த குறித்த விமானம் காலை 10:24 மணிக்கு கட்டுநாயக்கவில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
இந்த அவசரநிலையை எதிர்கொள்வதற்காக விமான நிலைய நிர்வாகத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கி இன்று (11) காலை புறப்பட்ட ஏ330 (A330) ரக பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது.
குறித்த விமானம் தற்போது நீர்கொழும்பு களப்பு கடற்பரப்பிற்கு மேலாகப் பறந்து, எரிபொருளைக் குறைத்து பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பான அவசரகால தரையிறக்கத்திற்குத் தயாராகும் வகையில் எரிபொருளை குறைத்தபடி, அந்த விமானம் முன்னதாக சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்டது
TK-731 என்ற இலக்கமுடைய இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இந்த விமானம் அகலமான உடல் அமைப்பைக் கொண்ட (Wide-body) ஏ330 ரக விமானம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மேற்கொண்டு வருவதுடன் பயணிகளின் பாதுகாப்பு கருதி விமான நிலைய அவசர கால நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.