ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம் : வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வர்த்தகக் கப்பல்கள் மீது, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை இரவு குறைந்தது இரண்டு ஏவுகணைகளை வீசியதாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு வர்த்தகக் கப்பல்கள் கணிசமான சேதமடைந்தன, ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று ஒரு அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி அந்த அந்த தகவல் தெரிவித்தது.
மற்றுமொரு கப்பல் மீதும் தாக்குதல்
இதேபோல், ஓமானின் லிமாவுக்குக் கிழக்கே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அடையாளம் தெரியாத பொருளொன்று தாக்கியதில் ஒரு எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்ததாக பிரிட்டனின் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிமாவிலிருந்து கிழக்கே சுமார் 8 கடல் மைல் (15 கி.மீ) தொலைவில் தெற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அந்த எண்ணெய்க் கப்பலின் இடது பக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு தீப்பிடித்ததாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் நிறுவனம் (UKMTO) செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தெரிவித்தது.
உயிரிழப்புகளோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்போ இதுவரை பதிவாகவில்லை.
எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததால் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரானிய தொலைக்காட்சி கூறியது, ஆனால் தெஹ்ரான் இந்தத் தாக்குதலுக்கு நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.