யாழ்ப்பாணத்தில் பரபரப்பு! பலாலி வளலாய் கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, பலாலி வளலாய் கடற்கரைப் பகுதியில் நேற்று (02.07.2026) காலை முழு உருவத்துடன் காணப்பட்ட அம்மன் சிலை ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம்போல் கடலுக்குச் சென்ற மீனவர்கள், கடல் அலைகளுடன் கரை நோக்கி மிதந்து வந்த உருவமொன்றைக் கண்டு அருகில் சென்று பார்த்தபோது, அது அம்மனின் திருவுருவச் சிலை என்பதைக் கண்டுள்ளனர். இதையடுத்து தகவல் அப்பகுதியில் வேகமாகப் பரவி, ஏராளமான பக்தர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டனர்.
கடலில் நீண்ட காலம் இருந்ததைக் காட்டும் வகையில் சிலையின் மீது கடல் பாசி மற்றும் படிவங்கள் காணப்பட்டாலும், திருவுருவம் பெரும்பாலும் சேதமின்றி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சிலை எவ்வாறு கடலுக்குள் சென்றது? எவ்வளவு பழமையானது? பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துடன் இதற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது கரை ஒதுங்கிய சிலைக்கு பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.