விஜய்க்கு ஆட்சி நடத்த ஒரு ஆண்டு அவகாசம் கொடுங்கள்-அண்ணாமலை!

விஜய்க்கு ஆட்சி நடத்த ஒரு ஆண்டு அவகாசம் கொடுங்கள்-அண்ணாமலை!

"அதிமுக-பாஜக-தவெக  கூட்டணி உருவாகியிருந்தால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்."

தமிழக அரசியல் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பல முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

2026 தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, திமுக அரசுக்கு எதிராக மக்களிடையே உருவான ஆட்சியெதிர்ப்பு மனநிலை என அண்ணாமலை தெரிவித்தார். "திமுக அரசுக்கு எதிரான அடித்தளம் ஏற்கனவே உருவாகியிருந்தது. 

விஜய் நல்ல முன்னேற்றம் காண்பார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தையும் வாக்கு சதவீதத்தையும் பெறுவார் என்று நினைக்கவில்லை. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கிடைத்த ஆதரவு இறுதி நேரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது" என்றார்.

மேலும், "விஜய் அரசியலிலும் ஆட்சியிலும் புதியவர். எனவே, அவருக்கு குறைந்தது ஒரு ஆண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது அவசியம் என்றாலும், அது ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருக்க வேண்டும். புதிய அரசுக்கு செயல்பட தேவையான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

விஜய்யின் வெற்றி தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றவில்லை என்றும் அண்ணாமலை கூறினார். "புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதையே நான் எப்போதும் ஆதரித்து வந்துள்ளேன். 

சில நேரங்களில் பண பலம் மற்றும் சாதி அரசியல் போன்ற பழைய கட்டமைப்புகளை உடைக்க, மக்களிடம் மிகப்பெரிய செல்வாக்கு கொண்ட சினிமா நட்சத்திரம் அல்லது மக்கள் ஈர்ப்புள்ள தலைவர் தேவைப்படுவார். அந்த வகையில் விஜய்யும், தமிழக வெற்றி கழகமும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாட்டுக்கு நல்ல நிர்வாகத்தை முன்னிலைப்படுத்தும், ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தலைவர்கள் தேவை. அரசியல் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்த சிலர், தேர்தல் முடிந்த பிறகு அவருடன் இணைந்திருப்பது ஜனநாயக கலாச்சாரத்திற்கு நல்லதல்ல என்றும், "இத்தகைய கட்சி தாவல்கள் தேவையற்ற இடைத்தேர்தல்களுக்கு வழிவகுக்கின்றன என்றார். 

இடைத்தேர்தல் என்பது தலைவர்களின் அரசியல் விளையாட்டு அல்ல; பின்னணியில் நடைபெறும் அரசியல் ஒப்பந்தங்களின் விளைவு" என்றார்.

இதனைத்தொடர்ந்து, தான் முன்னெடுத்து வரும் அரசியல் இயக்கம் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். "தற்போது எங்கள் இயக்கத்தில் சுமார் 19 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அது 50 லட்சத்தை எட்டிய பிறகே, அரசியல் கட்சியாக மாறுவது குறித்து அதிகாரப்பூர்வமாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும், "எங்கள் இயக்கத்தின் அரசியல் அணுகுமுறை தமிழக வெற்றி கழகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அரசியல் கலாச்சாரத்தை தரம் தாழ்த்தும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் ஏற்க மாட்டோம்" என்றும் அவர் கூறினார். அரசியலில் இளைஞர்கள், பெண்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்பதே தனது முக்கிய இலக்கு என்றும் கூறினார். 

கூட்டணி அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, "அதிமுக-பாஜக-தவெக  கூட்டணி உருவாகியிருந்தால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். இந்த தேர்தல் வெறும் எண்களின் போட்டி அல்ல; மக்களிடம் உருவான அரசியல் 'கெமிஸ்ட்ரி' தான் வெற்றியை தீர்மானித்தது" என்று தெரிவித்தார்.

அண்ணாமலையின் இந்த கருத்துகள், தமிழக அரசியலில் புதிய ஆட்சியின் செயல்பாடு, எதிர்க்கட்சிகளின் எதிர்கால வியூகம் மற்றும் புதிய அரசியல் இயக்கங்களின் திசை குறித்து முக்கிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.<bdi>விஜய்க்கு ஆட்சி நடத்த ஒரு ஆண்டு அவகாசம் கொடுங்கள்-அண்ணாமலை!</bdi>