பதினேழே நாட்களில் இன்னோர் இடியா? - கவிஞர் வைரமுத்து உருக்கம்

பதினேழே நாட்களில் இன்னோர் இடியா? - கவிஞர் வைரமுத்து உருக்கம்

பாக்யராஜ் உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரும், பிரபல நடிகருமான கே.பாக்யராஜ் இன்று திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

பாக்யராஜ்  உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை மதியம் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு, பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பதினேழே நாட்களில்

இன்னோர் இடியா?

பாரதிராஜாவைப் புதைத்த

மண்ணின் ஈரம்

இன்னும் காயவில்லை;

அதற்குள் பாக்யராஜுக்குத்

தீ மூட்டுவதா?

என்ன கொடுமை இது!

பாக்யராஜ்

ஈடு இணையற்ற கலைஞன்

அவிழ்க்க முடியாத முடிச்சுகளைத்

திரைக்கதையில் இட்டு

அதைத் தான்மட்டுமே

அவிழ்க்கத் தெரிந்தவர்

அவர் உருவம்

குறையென்று கருதப்பட்டது;

அதிலும் வென்றார்

அவர் குரல்

குறையென்று கருதப்பட்டது;

அதிலும் வென்றார்

நகைச்சுவைக்கென்று

அவர் தனித்தடம் தயாரிப்பதில்லை;

கண்ணின் பாகமான இமைபோல

திரைக்கதையில் நகைச்சுவையை

இழைத்து விடுவார்

80களில்

தமிழ் சினிமாவை நோக்கிவந்த

ஒவ்வொரு கிராமத்து இளைஞனுக்கும்

நம்பிக்கை கொடுத்தவர்

பாக்யராஜ்

எம்.ஜி.ஆர் அவரைத்

தன் வாரிசு என்றார்

பாக்யராஜின்

எதிர்பாராத மறைவு

கலையுலகை அதிரவைக்கிறது

வாழ்ந்திருக்க வேண்டிய

கலைஞன் அய்யா நீ!

பாதியில்

பயணப்பட்டு விட்டாயே!

உன் உயிர்

அமைதி அடைக!

ஆழ்ந்த இரங்கல்

அனைவருக்கும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது