வாக்கு இயந்திரத்தில் விஜய் புகைப்படம் எங்கே? வாக்காளர்கள் கேட்ட கேள்வி.. விழுந்து சிரித்த அதிகாரிகள்
திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்கு இயந்திரங்களில் விஜய் புகைப்படத்தை காணவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பியது பேசுபொருளாகி இருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படம் இடம்பெறாது என்பதே தெரியாமல் சிலர் கேள்வி எழுப்பியது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்துள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் சேர்த்து 36.71% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. மொத்தமுள்ள 5.73 வாக்காளர்களில் 2 கோடி வாக்காளர்கள் வாக்கினை போட்டுவிட்டனர். இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால், இளைஞர்கள் பலரும் தேர்தலில் வாக்கு செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கேற்ப விஜய் பிரச்சாரங்களில் அதிகளவில் இளைஞர்களே காணப்பட்டனர். நகர்ப்புறங்களில் இளைஞர்களிடையே விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் களமிறங்கி இருக்கிறார். இந்த நிலையில் விஜய் ஆதரவாளர்களால் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடந்து வரும் வாக்குப்பதிவின் போது சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பதிவிட்ட எக்ஸ் பதிவில், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் சில ஜாலியான சம்பவங்கள் நடந்துள்ளன. சில வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் விஜய்யின் புகைப்படத்தை காணவில்லை என்று அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டுள்ளனர். இதனை கேட்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் சிரிக்க தொடங்கி இருக்கின்றனர். ஏனென்றால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் மட்டுமே இடம்பெறும். இந்த அடிப்படை விஷயங்களை கூட அறியாமல் தவெக ஆதரவாளர்கள் வாக்களிக்க வந்துள்ளனர். இதன்பின் அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதனை ஓரிருவர் என்று அல்லாமல், ஏராளமானோர் கேட்டிருப்பது தான் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் சோசியல் மீடியாவிலும் டிரெண்டாகி வருகிறது.