
சுற்றுலா வருவாயைப் பற்றிய கணக்கீடுகளில் முரண்பாடு
இலங்கையின் 2025ஆம் ஆண்டுக்கான சுற்றுலா வருவாயைப் பற்றிய கணக்கீடுகள் தற்போது தேசிய அளவில் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன.
ஏனெனில் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மத்திய வங்கி வெளியிட்ட புள்ளிவிபரங்களுக்கு இடையில் பெரிய முரண்பாடு தோன்றியுள்ளது.
நுவரெலியாவில் உள்ள சீதையம்மன் ஆலயத்தின் புதிய தியான மண்டபம் திறப்பு விழாவில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டுமே சுற்றுலா மூலம் இலங்கை 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அதிகார பூர்வ புள்ளிவிபரங்கள் வேறு ஒரு தொகையை குறிப்பிடுகின்றன.
அந்த அறிக்கையின் படி, 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் சுற்றுலா வருவாய் 1.71 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 10வீத உயர்வு எனச் சுட்டிக்காட்டப்பட்டாலும், அமைச்சரால் குறிப்பிடப்பட்ட தொகையைப் விட இது பாதிக்கும் குறைவாகவே உள்ளது.
துறைசார் அமைச்சர் மற்றும் மத்திய வங்கிக்கிடையிலான கணக்கீட்டுத் தவறுகள், அரசாங்கத்துக்கு தகவல் ஒருங்கிணைப்பு இல்லாமையைக் காட்டுவதாகவும், பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை சீர்குலைக்கும் அபாயம் உள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.