
பிரதான தொடருந்து மார்க்கத்துக்கான விசேட நேர அட்டவணை அறிவிப்பு!
கடும் மழை காரணமாக மீரிகமவிலிருந்து கொழும்பு வரையிலான தொடருந்து மார்க்கத்தில் மீரிகம - விஜயரஜதஹன தொடருந்து நிலையத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், பிரதான தொடருந்து மார்க்கத்தின் ஊடான தொடருந்து சேவைகள், இன்று(15) காலை முதல் விசேட நேர அட்டவணைமூலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ள இடம்வரை மூன்று தொடருந்துகள் இயக்கப்படும் என்றும் அங்கிருந்து கொழும்பு கோட்டைவரை மூன்று தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று (15) காலை முதல் வெயாங்கொடையிலிருந்து நான்கு தொடருந்துகளும், கம்பஹாவிலிருந்து ஒரு தொடருந்தும் சேவையில் ஈடுபடவுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ராகமவிலிருந்து இரண்டு தொடருந்துகள் எனக் கொழும்பு கோட்டைவரை 10 தொடருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு - கண்டி பிரதான வீதியின், கீழ் கடுகண்ணாவ பகுதியை மீண்டும் திறப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று காலைத் தீர்மானம் எடுக்கப்படும் எனக் கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தெரிவித்தார்.